இனி 25 செகண்ட் தானா..? ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Selvakumar | Oct 02, 2019 09:44 AM
ஜியோவைப்போல் அழைப்பின் போது வரும் ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைக்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் போன் செய்யும் போது ரிங் ஆகும் நேரத்தை 45 விநாடிகளாக வைத்திருந்தது. ஆனால் சமீபத்தில் ஜியோ தனது ரிங் ஆகும் நேரத்தை 20 விநாடிகளாக குறைத்துவிட்டது என ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ இடம் புகார் அளித்தது.
ஒருவர் ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஜியோ வாடிக்கையாளருக்கு போன் செய்தால், அது 20 விநாடிகளுக்கு மட்டுமே ரிங் அடித்து கட்டாகிவிடும். இதனால் ஜியோ வாடிக்கையாளருக்கு அது மிஸ்டுகால் என காட்டும். இதனை அடுத்து மிஸ்டு கால்களை பார்த்த ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வாடிக்கையாளருக்கு போன் செய்வர். இப்போது ஏர்டெல் நிறுவனத்துக்கு இது இன்கம்மிங் அழைப்பாக மாறும். டிராய் விதிகளின் படி இன்கம்மிங் அழைப்பு பெரும் நிறுவனம் எதிர் நிறுவனத்துக்கு கட்டணமாக 1 நிமிடத்துக்கு 6 பைசா கொடுக்க வேண்டும்.
இதனை எதிர்த்து ஏர்டெல் புகார் அளித்த நிலையில், ஜியோ ரிங் ஆகும் நேரத்தை 25 விநாடிகளாக மாற்றியது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்தின் மீதான புகாருக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், தாங்களும் ரிங் ஆகும் நேரத்தை 25 விநாடிகளாக குறைக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வோடாஃபோன் நிறுவனமும் தங்களது ரிங் ஆகும் நேரத்தை 25 விநாடிகளாக குறைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
