“கிட்ட வந்தால் கட்டிப் பிடித்துவிடுவேன்!”.. போலீஸாரையும், மருத்துவக்குழுவையும் மிரட்டிய கொரோனா நோயாளி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னை யாராவது நெருங்கினால் கட்டிப் பிடித்து விடுவேன் என்று கொரோனா தொற்று உள்ளவர் மிரட்டியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பி ஓடி பின்னர் போலீஸாரால் பிடிக்கப்பட்டார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது, “என்னை யாராவது நெருங்கினால் கட்டிப்பிடித்துவிடுவேன்” என்று கூறி அவர் மிரட்டியுள்ளார். நீண்ட நேரம் போராடியும் அந்த நபர் மருத்துவமனைக்கு வராததால் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு மருத்துவ குழுவினரும் போலீஸாரும் சென்று அந்த நபரை அழைத்து வர முயற்சித்தனர். எனினும் தொடர்ந்து முரண்டு பிடித்த அவரை தனி பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிந்தபடி போலீஸாரும் மருத்துவர்களும் அந்த நபரை பிடித்து சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.