'சாப்பிட உணவே இல்லை...' 'எப்படியும் சாகத்தான் போகிறோம்...' 'பட்டினியால் போராட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 28, 2020 08:57 AM

வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

People who fought in Lebanon, claiming to die of starvation

லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடாகும். சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொருளாதார நிலைத்தன்மையின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற காரணங்களால் லெபனானில் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போரடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரசும் பரவத் தொடங்கியதையடுத்து அங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும், வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த லெபனான் மக்கள், அரசுக்கு எதிராக சாலைகளிலும், வீதிகளிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தின் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகமூடியை அணியாமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டி வருகிறார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில், '' சாப்பிட உணவே இல்லாதபோது நாட்டில் வைரஸ் பரவுவது குறித்து நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும். நானும் என் குடும்பமும் எப்படியும் உணவின்றி பட்டினியால் சாகத்தான் போகிறாம்’’ என்றார்.