'தமிழக எல்லையில் நடு ரோட்டில் எழுப்பப்பட்ட சுவர்'... 'திடீரென எழுந்த பரபரப்பு'... அதிகாரிகள் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் சாலையின் நடுவே சுவர் எழுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பத்தலபள்ளி, சைனகுண்டா, பொன்னை, கிருஸ்டியான்பேட்டை, சேர்காடு, பரதராமி ஆகிய 6 சோதனைச்சாவடிகளில் பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 சோதனைச்சாவடிகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து பொன்னை, சைனகுண்டா ஆகிய 2 தமிழக-ஆந்திர எல்லை சோதனைச்சாவடி சாலைகள் இன்று முழுவதுமாக மூடும் வகையில் சாலை நீளத்திற்கு 3 அடி உயரம் வரை சுவர் எழுப்பி சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வ்ருவது தடைபடாமல் இருக்க, ஆந்திராவில் இருந்து பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிருஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாகவும், சைனகுண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிக்கவே இந்த சாலை மூடல் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.