'5 மாதமாக உடனில்லாத அம்மா'.. 10 பேர் கொண்ட கும்பலின் பாலியல் வேட்கையில் சிக்கித்தவித்த சிறுமிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 19, 2019 03:48 PM
ஏதுமறியாத இளஞ்சிறுமிகளுக்கு திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து, 10 பேர் கொண்ட கும்பல் அந்த குழந்தைகளை தொடர்ந்து 5 மாதங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 7 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில், மகள்களை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு, புதுச்சேரிக்கு வேலைக்குச் சென்றார். அங்கு வேறு நபரைக் காதலித்து, அவருடன் புதுச்சேரியில் தனி வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தார்.
ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அந்த பெண்மணிக்கு குழந்தை பிறந்ததால், வேலைக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டு வீட்டோடு இருந்தார். இதனிடையே முதல் கணவருக்கு பிறந்த தனது மகள்களைக் காணச் சென்றபோது, அந்த 2 சிறுமிகளும் தங்களை 10 பேர் கொண்ட கும்பல் 5 மாதங்களாக பாலியல் ரீதியலாக துன்புறுத்தி வருவதைக் கூறி கதறி அழுதிருக்கின்றனர். இதனால் பயந்துபோன அந்த பெண்மணி, தனது அம்மா வீட்டில் இருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு, புதுச் சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததோடு, புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு நாள் பள்ளி சென்ற இரண்டு சிறுமிகளுள், ஒரு சிறுமி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளாள். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் கீறல், காயங்களைக் கண்டதுடன், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை, ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாயாரை அழைத்து பள்ளி நிர்வாகம் கேட்டபோது, சிறுமியின் தாயார் நடந்ததை கூறியுள்ளார். அதன் பின், இரண்டாவது மகளும் மருத்துவ பரிசோதனையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை நல வாரியத்திற்கு ஆசிரியர்கள் கொடுத்த தகவல்களின் பேரில், விஷயம் விழுப்புரம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்றது.
அவர்கள் சிறுமிகளை விசாரித்தபோது, சிறுமிகள், அந்த 10 பேர் கொண்ட கும்பலின் பெயர்களை துல்லியமாகக் கூறியுள்ளனர். இதனைக் கொண்டு விழுப்புரம் போலீஸார் துரிதமாக விசாரித்து, சிறுமிகள் குறிப்பிட்டுச் சொன்ன அந்த 5 பேரை பிடித்துள்ளனர். மீதமுள்ள 5 பேரை தேடி வருகின்றனர். சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.