'அட்மிஷன் வாங்க வரவங்க எல்லாரும்...' 'அந்த கோர்ஸ் தான் வேணும்னு கேக்றாங்க...' - அதுக்கான காரணம் தான் ஹைலைட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 85 சதவீத மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் மைக்ரோபயாலஜி படிப்பில் சேர மாணவர்கள் தீவிர ஆர்வம் காட்டுகின்றர்.

உயர்கல்வித்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 80 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கினால், இந்த வருடம் முதன்முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மாநிலம் முழுவதும் உள்ள முதல்தர அரசு கலைக்கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், இதர கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் நிரம்பிவிட்டன. தற்போது காலியாக உள்ள ஓரிரு இடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டு வந்த கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. அதன் பாதிப்பு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது. அதாவது, வைரஸ் தொடர்பான ஆய்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஒன்றான பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் சேர வழக்கத்தை விட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், அனைத்து கல்லூரிகளிலும் அந்த பிரிவு வேகமாக நிரம்பியது.
இதுகுறித்து அரசுக்கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தபோது,
அரசு கலை கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் விருப்ப பாடம் என்பது, அந்தந்த காலகட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து வருகிறது. மற்ற பாடப்பிரிவுகளை விட யாரும் எதிர்பாராத வகையில், இளங்கலை மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவியது. பெரும்பாலான கல்லூரிகளில் அந்த பாடப்பிரிவிற்கு 40 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், சராசரியாக 300 பேர் வரை மைக்ரோபயாலஜி பாடப்பிரிவை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கவும் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இதற்கு ஆய்வு படிப்பான மைக்ரோபயாலஜி பிரதானமாக பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதில், ஆய்வகத்தினரின் பங்கு முக்கியம். இதனால், வரும் காலங்களில் இதற்காக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற காரணத்திற்காகவே, நடப்பாண்டு அந்த படிப்புக்கு அதிக போட்டி இருந்தது.
இதில் சேர முடியாதவர்கள், மற்றொரு ஆய்வக படிப்பான இளங்கலை பயோடெக்னாலஜி பிரிவிலும் சேர விருப்பம் தெரிவித்தனர். மாணவர்கள் +2-வில் பெற்ற கட்ஆஃப் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகள் இந்த பாடப்பிரிவில் கூடுதல் இடம் வழங்குமாறு, கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் அனுமதி கேட்டுள்ளன. அதன் அடிப்படையில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வாய்ப்புள்ளது என கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
