"குணமடைந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.. எப்போ டிஸ்சார்ஜ்..?". மருத்துவனை வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
தமிழக முதலமைச்சரான முக.ஸ்டாலின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த வாரம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில்,"இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
சிகிச்சை
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்ற முக.ஸ்டாலின் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,"மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டிருந்தது. மேலும், கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிஸ்சார்ஜ்
இதனிடையே, கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதல்வர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து இன்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"மாண்புமிகு தமிழக முதல்வர் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக நலம்பெற்றிருக்கிறார். அவர் நாளையுடன் தனது தனிமைப்படுத்துதல் காலத்தை முடிப்பதுடன், டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இன்னும் ஒரு வாரத்திற்கு வீட்டில் ஓய்வு எடுக்குமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வு
கொரோனோ தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, முதல்வர் சிகிச்சையில் இருப்பதால் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு துரைமுருகன் தலைமை தங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு வாரத்திற்கு ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் அரசு விழாக்களில் முதல்வர் பங்கேற்பாரா? என்ற கேள்வி பலரிடத்தில் எழுந்துள்ளது.