நிவர் புயலால் '200 ஏக்கர் நெல் பயிர்கள்.. வாழைத் தோப்புகள் நாசம்!'.. 'உடனே கடலூர் விரைந்து' நிவாரணங்களை வழங்கிய தமிழக முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதி தீவிர புயலான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்த நிலையில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அடித்த மழையால், ஏராளமான பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் கடலூர் விரைந்து நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக ரெட்டிச்சாவடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், புயலால் வாழைத்தோப்புகளை பறிகொடுத்த வாழை விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
இதேபோல், மனம்பாடி என்ற கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியது உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி கேட்டறிந்தார். முதல்வருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை செயலாளர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அத்துடன் புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கியதுடன், புயலால் சேதமடைந்த விசைப் படகுகளையும் பார்வையிட்டார்.