"இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்"... 'மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில்'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீட் தேர்வை கொண்டு வந்த பின்னர் அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டு, கடந்த ஆண்டு வெறும் 6 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சேர்க்கை ஆணைகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார்.
அதன்பின்னர் இதுகுறித்து பேசியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் தற்போது ஏழை எளிய மக்களின் கனவை நனவாக்கியுள்ளது. தமிழகத்தில் நான் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு 1990 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு வெறும் 6 பேர் மட்டுமே அரசுப்பள்ளிகளில் பயின்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர். தற்போது இந்த சட்டத்தால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 404 பேர் சேரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நன்னாள், அரசுப் பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.