"கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு".. விருந்துக்கு போன இடத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான ஒரே மாதத்தில் விருந்திற்கு சென்றிருந்த தம்பதிக்கு நேர்ந்த சம்பவம், கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் லண்டனில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சஞ்சயின் தாய் மாமனான தேனி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த காவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதம் முன்பாக திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ராஜாவின் திருமணம் நடந்த சமயத்தில், சஞ்சய் லண்டனில் இருந்ததால் அவரால் கல்யாணத்திற்கு வர முடியாத சூழல் இருந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது ஊருக்கு வந்திருந்த சஞ்சய், போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக ராஜா மற்றும் காவ்யா ஆகியோரை அழைத்துள்ளார்.
தொடர்ந்து, போடி அருகே அமைந்துள்ள ஆற்றில் புதுமண தம்பதியை குளிப்பதற்காகவும் சஞ்சய் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் குளிக்க சென்ற பகுதி சற்று ஆழமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில், பாறையில் வழுக்கியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ராஜா, காவ்யா மற்றும் சஞ்சய் ஆகிய மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சஞ்சய் உள்ளிட்ட மூவரின் உடல்களையும் மீட்டனர். திருமணமான ஒரே மாதத்தில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுமண தம்பதி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களின் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
