'நான் ஆம்பள இல்ல...' திடீர்னு 'ஸாரி' எடுத்து கட்டிக்குறாரு சார்...! 'வெளிய தலை காட்ட முடியல...' மனைவி எடுத்த விபரீத முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவர் திருநங்கையாக மாறியதால், மனமுடைந்த மனைவி, தனது மூன்று குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (42). இவரின் மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகிறது. இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ஜெயந்தி தன் 3 குழந்தைகளுடன் வேலூர் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும் குழந்தைகள் மீதும் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். அதைத்தொடர்ந்து, ஜெயந்தியை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் அவர் கூறுகையில், ``என் கணவர் கட்டட வேலை செய்துவந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருநங்கைகள் சிலருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. திடீரென அவரும் சேலை கட்டிக்கொண்டு "நான் ஆண் இல்லை, பெண்ணாகவே உணர்கிறேன்" என்று கூறுகிறார். எனக்கு அவமானமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சொந்தக்காரர்களும் கேலி பண்ணி கிண்டல் அடிக்கிறார்கள். சேலை கட்ட வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. இப்போது, எங்களைத் தனியாக தவிக்க விட்டுவிட்டு திருநங்கைகளுடன் சென்றுவிட்டார்.
என் குழந்தைகளுக்கு அப்பா வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறோம். குழந்தைகள் பசியில் வாடுகிறது. இந்த மன வேதனையில் தான் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்’’ என்று கூறி கதறி அழுதார்.
ஜெயந்தி ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தற்போது தெரியவந்துள்ளது. `எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல’ என ஜெயந்திக்கு அறிவுரை கூறி குழந்தைகளுடன் அவரை மேல்மொணவூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாக கொண்டுபோய் சேர்த்தனர்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.