VIDEO: முதல்வர் ஸ்டாலின் சென்ற சாலையில்.. டம்ளரை வீசிய டீ மாஸ்டர்.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் சென்ற சாலையில் டீ கடைக்காரர் டம்ளரை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.
முன்னதாக நெல்லை மாவட்ட காவல் கிணறு எல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் வாகனம் வரும்போது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் டம்ளர் ஒன்றை எறிந்துள்ளார்.
பின்னர், அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்றில் ஏறி அவர் தப்பி சென்றார். இதனால் திமுக பிரமுகர்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த கடையை மூட உத்தரவிட்டனர்.
விசாரணையில் அந்த டீ கடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டதாகவும், கடையில் 2 தினங்களுக்கு முன்புதான் டீ மாஸ்டராக பாஸ்கர் என்பவர் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
