BREAKING: கைது செய்யப்பட்ட ABVP நபர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார் மருத்துவர் சுப்பையா. இந்நிலையில் அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவரை பணி இடை நீக்கம் செய்திருக்கிறது மருத்துவ கல்வி இயக்குநரகம்.

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கு டாக்டர் சுப்பையா ஆதரவு தெரிவித்திருந்ததாகவும், கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக இருந்தவர்களை நேரில் சென்று சுப்பையா பார்த்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த புகார் பற்றிய விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தஞ்சை மாணவி வழக்கு
தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த ஜன.,31ம் தேதி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
முதல்வர் ஸ்டாலின் வீடு எதிரில் போராட்டம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி டெல்லியிலும் தமிழகத்திலும் ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டின் முன்பும் சிலர் போராட்டம் செய்தனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரையும் பிப்ரவரி 28வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஏபிவிபியின் முன்னாள் தலைவர்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்து சுப்பையா ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு எதிரே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்களை சுப்பையா சந்தித்திருக்கிறார்.
அரசு ஊழியராக இருந்துகொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு எதிரே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்களை சந்தித்ததால் அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த புகார் பற்றிய விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பழைய சர்ச்சை
2020 ஆம் ஆண்டு சுப்பையா வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 52 வயதான பெண்மணியின் வீட்டு வாசலில் அவர் சிறுநீர் கழித்ததாகவும் அதுமட்டுமல்லாமல் குப்பைகளை கொட்டியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்போது தமிழகம் முழுவதும் இப்பிரச்சினை வைரலாக பேசப்பட்டது. இது, தொடர்பாக அந்தப் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் சில நாட்களில் அந்தப் பெண்மணி தனது புகாரை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
