தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்பு வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் தமிழ் மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 13.09.2021 அன்று நடந்த 2021-22ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும், நியமன அலுவலர்களால் தேவைப்படும் நேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாளினை தகுதித் தேர்வாக கட்டாயமாக்க அரசு முடிவு செய்து ஆணை பிறப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் 10ஆம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் அல்லது தாட்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
ஒரேநிலை கொண்ட தேர்வுகளின் (தொகுதி III மற்றும் IV) நடைமுறைகளின்படி, தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டு பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணை வெளியிடப்பட்ட நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள இதர தெரிவு முகமைகளை பொருத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பாக மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்" இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
