'இனிமேல் வாய்ப்பில்ல'...'800 பேருக்கு டெர்மினேஷன் லெட்டர் அனுப்பு'... இந்தியாவிலிருந்து பெட்டியை கட்டும் பிரபல நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று தனது செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து படிப்படியாக குறைத்துக் கொள்ள உள்ளதால், ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுவதாகக்கூறி, டிக் டாக் உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தரத் தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தனது செயல்பாடுகளை குறைத்துக் கொள்ள டிக்டாக் செயலியை வெளியிடும் bytedance நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
பைட் டேன்ஸ் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் 2000 பேர் பணியாற்றிவரும் நிலையில், 800 பேர் நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபட்டுவரும் 100 முதல் 200 பேரைத் தவிர மற்ற அனைவரும் நீக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்தியாவில் தனது அலுவலகத்தை தொடர்ந்து இயங்கச் செய்ய நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் தங்களது நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து தொழிலாளர்களுக்கு டிக்டாக் நிறுவன தலைவர் மின்அஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில், பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என்று நம்பியதாகவும், 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது இது சாத்தியமில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கடந்த ஆண்டு ஜூன் 29 முதலே அரசின் உத்தரவுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாக டிக் டாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிக் டாக் செயலியை மீண்டும் அறிமுகம் செய்து, லட்சக்கணக்கான பயன்பாட்டாளர்களின் ஆதரவை மீண்டும் பெற ஆர்வமுடன் இருப்பதாக டிக் டாக் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
