'ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு...' 'நாட்டிலேயே அதிக முதலீடுகள் ஈர்த்த மாநிலம் தமிழகம்...' - தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கைகள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பரவும் இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தமிழக அரசு சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவிருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலும், பொருளாதார பாதிப்புகளை ஈடுசெய்யமுடியாமலும் தவித்து வருகின்றன. மேலும் வேலைவாய்ப்பின்மையும், வேலையிழப்பும் பெருகிவரும் சூழலில் தமிழகம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஹோஸ்டியா அலுவலகத்தை திறந்து வைத்த தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் ஓசூரில் மட்டும் 2,000-க்கும் அதிகமான சிறு,குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், ஒசூர் முதன்மை தொழில் நகரமாக விளங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களின் மூலம், தமிழகத்தில் முதலீடுகளை செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல், நோக்கியா மற்றும் ஆட்டோ மொபைல், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம், தொழில் வளர்ச்சியில் உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா சமயத்தில் மட்டும் 55 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரையில் ரூ.40,304 கோடி முதலீடுகளின் மூலம், 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.