'இளைஞர்களின் ரோல்மாடல்'!.. அரசுப்பள்ளியில் பயின்று... தமிழ்நாட்டின் டிஜிபியாக உயர்ந்தது எப்படி?.. 'சைலேந்திர பாபு'வின் அசரவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jun 29, 2021 11:39 PM

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபி ஏ.கே. திரிபாதி நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளதை அடுத்து சைலேந்திரபாபு அந்த பொறுப்பை கவனிக்க உள்ளார்.

tamil nadu new dgp sylendra babu background details

சைலேந்திரபாபு பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை. 58 வயது நிறைந்த இவர் 1987ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அரசுப்பள்ளியில் பயின்றவர். விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டம், எம்பிஏ மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை முடித்தவர். சைபர்கிரைம் ஆய்வுப்படிப்பையும் முடித்துள்ளார். 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த இவர், தனது 25வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக 1987ம் ஆண்டு தமிழக காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எஸ்பியாக கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், சென்னை அடையாறு துணை ஆணையர் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பணிபுரிந்தார். வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக இருந்த போது அதில் முத்திரை பதித்தவர்.

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய போது 2004ம் ஆண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் கொடி கட்டிப் பறந்த தாதாக்களுக்கு முடிவு கட்டினார்.

தற்போது சென்னையில் பெரிய ரவுடிகள் அந்த அளவுக்கு இல்லை என்றால் அதற்கு சைலேந்திரபாபுவின் ஆரம்பகால துணிச்சல் நடவடிக்கைகள் தான் காரணம். அதைத் தொடர்ந்து, வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக இருந்து முத்திரை பதித்தார்.

அதன் பிறகு சைலேந்திரபாபு வடக்கு மண்டல ஐஜியாக பதவியேற்றார். அதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அவரை தேடி வந்தது. அங்கும் அவரது பணி பாராட்டுதலைப் பெற்றது. 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போது சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடல் போல சூழ்ந்து கொண்டது. உடனடியாக களத்தில் இறங்கிய சைலேந்திரபாபு கடலோர பாதுகாப்பு குழும நீச்சல் வீரர்களுடன் வெள்ளக் களத்தில் குதித்தார். வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு நீந்தியே சென்று வீட்டுக்குள் சிக்கிய பலரை மீட்டது இன்னும் பாராட்டை பெற்றது.

3 ஆண்டுகள் அவர் தலைமையில் செயல்பட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமம் இதுவரை பெறாத புதிய பலம் பெற்றது. தமிழகம் முழுவதும் கூடுதலாக கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் தொடங்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் மீனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தை மேலும் பலப்படுத்தினார். அந்நிய நாட்டினர் தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாத படி தமிழக கடல் எல்லைகள் மிகத் தீவிரமாக பாதுகாக்கப்பட்டது.

பணத்துக்கு ஆசைப்பட்டு கள்ளத்தோணியில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கள்ளத்தோணி ஆசாமிகளை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சைலேந்திரபாபு, அவ்வாறு செல்பவர்களை அழைத்து விழிப்புணர்வு அளித்தார். இதனால் கள்ளத்தோணியில் ஆஸ்திரேலியாவிற்கு தற்போது செல்வது குறைந்துள்ளது.

அதனையடுத்து, சைலேந்திரபாபு சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். சிறைக்கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயம், கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். தண்டனை முடிந்து விடுதலை ஆகும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அந்த திட்டம் அமைந்தது.

14 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் கைதிகள் வெளியே சென்று வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று விழிக்காமல், தொழில் செய்து அவர்கள் தங்கள் வருமானத்தை தேடிக் கொள்ள இது ஏதுவாக அமைந்தது. மேலும் நன்னடத்தையுடன் உள்ள கைதிகள் 700க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தார். பின்பு அவர் டிஜிபியாக பதவி உயர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, ரயில்வே காவல்துறை டிஜிபியாக தற்போது பதவியில் உள்ளார்.

"25 நிமிட போட்டியில் வெற்றி பெற 25 வருட பயிற்சி தேவைப்படும், மாணவர்களுக்கும் இது பொருந்தும்" என்ற சைலேந்திரபாபுவின் வார்த்தைகளில் அவரது வாழ்க்கையின் வெற்றியும் அடங்கும்.

தனது 30 ஆண்டுகால காவல்துறை அனுபவத்தில் சைலேந்திரபாபு பல அரிய சாதனைகளை நிகழ்த்திய அவரது கடமை உணர்வை பாராட்டி குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்காக பாரதப்பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பன் அதிரடிப்படையில் பணியாற்றி வீரதீர செயல்கள் ஆற்றியதற்காக முதல்வர் பதக்கமும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, 'YOU TOO BECOME AN IPS OFFICER', 'BE AMBITIOUS', 'PRINCIPLES OF SUCCESS IN INTERVIEW', 'A GUIDE OF HEALTH AND HAPPINESS', 'அமெரிக்காவில் 24 நாட்கள்' ஆகியவை இவர் எழுதிய நூல்கள் ஆகும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu new dgp sylendra babu background details | Tamil Nadu News.