‘அடுத்தடுத்து வெளிநாடு பயணம்’... ‘முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சரை’... ‘தொடர்ந்து யார் யார் எங்கே?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 30, 2019 04:08 PM

முதல்வர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அரசுப் பயணமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

tamil nadu ministers foreign tours details here

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு, சென்னையில் இருந்து கடந்த புதன்கிழமையன்று விமானம் மூலம் முதல்வர் பழனிசாமி லண்டன் சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். இங்கிலாந்தை தொடர்ந்து வரும் 2-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர். இதையொட்டி தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர், அமெரிக்கா செல்கின்றனர்.

இதனிடையே தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், 7 நாள் அரசு முறை வெளிநாட்டு பயணமாக, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கு, கடந்த புதன்கிழமையன்று புறப்பட்டுச் சென்றார். முதல்கட்டமாக பின்லாந்து சென்ற அவர், அங்கு உலக அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆல்டோ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று பேராசிரியர்களிடம் கல்வி கற்றல், கற்பித்தல் குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை செய்தார். இதேபோல் செய்தி விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூவும் மொரிஷீயஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில், சரணாலயங்கள் மேம்பாடு, வன உயிரினப் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், உயரதிகாரிகள் குழு கடந்த வியாழனன்று காலை, விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றனர். தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதேபோல், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தனது துறை சம்பந்தமாக ஆலோசனை நடத்த, அடுத்த வாரம் ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக தொழிலாளர்துறை அமைச்சரான நிலோஃபர் கஃபீல், சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் பங்குபெற ரஷ்யா சென்றுவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் திரும்பியிருந்தார்.

Tags : #EDAPPADIKPALANISWAMI #MINISTERS #FOREIGNTOUR