சீட்டுக்கட்டு மாதிரி சரிந்த ‘சிமெண்ட்’ கட்டிடங்கள்.. ஆனா சிங்கிள் டேமேஜ் இல்லாம ஆற்றுக்கு நடுவே கம்பீரமாக நின்ற ‘ஓலைக்குடிசை’ சிவன் கோயில்.. ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆற்று வெள்ளத்தில் சிமெண்ட் கட்டிடங்கள் சரிந்து விழுந்த நிலையில், ஓலைக்குடிசையிலான சிவன் கோயில் மட்டும் கம்பீரமாக நின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பாலாறு பாலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுப்பகுதியில் சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மணலில் புதைந்த நிலையில் சிலைகள் இருப்பதை கண்டனர். உடனே இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மக்கள் மண்ணில் புதைந்திருந்த சிவன், மரகதாம்பிகை கற்சிலைகளை கண்டெடுத்தனர்.
இந்த சிலைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் அடிப்படையில், இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை அடுத்து சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே ஓலைக்குடிசை அமைத்து கோயில் அமைக்கப்பட்டது. அக்கோயிலுக்கு ஆதிபரமேஸ்வரர் கோயில் என பெயிரிட்டு மக்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பல கான்கிரீட் கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் பாலாற்றின் நடுவே ஓலைக்குடிசையில் அமைக்கப்பட்டுள்ள ஆதிபரமேஸ்வரர் சிவன் கோயிலும் வெள்ளத்தில் சூழ்ந்தது. ஆற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும் ஓலைக்குடிசையில் ஆன சிவன் கோயிலுக்கு மட்டும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் கோயிலை சுற்றி உள்ள வேப்ப மரங்களுக்கும் சிறிய அளவு பாதிப்பு கூட ஏற்படவில்லை. தற்போது வெள்ளம் குறைந்துள்ள நிலையில், ஓலைக்குடிசையில் அமைந்துள்ள சிவன் கோயிலை சுற்றியும் மணல் குவிந்து மேடாகியுள்ளது. இதை பார்க்க ஒரு தீவு போல காட்சி அளிக்கிறது. வெள்ளத்தில் சிமெண்ட் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், ஓலைக்குடிசையில் ஆன சிவன் கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாததைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்.