VIDEO: சென்னை மாலில் புகுந்த மழை வெள்ளம்.. இப்படி பொத்துக்கிட்டு வரும்னு யாரும் எதிர்பார்க்கல.. வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னையில் நேற்று பகல் 12 மணி முதல் பெய்த கனமழையால் மால் ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்து மழை நீர் புகுந்தது.
காலையில் வானம் இருண்டு காணப்பட்டது. லேசாக ஆங்காங்கே தூரல் இருந்தது. மதியம் 12 மணிக்கு வேகமாக பெய்ய தொடங்கிய மழை 3 மணியளவில் சென்னையை உலுக்கி எடுத்தது. திடீர் மழையால் சாலைகள் வெள்ளம் சூழ்ந்தது. காலையில் வெளியே சென்றோர் வீடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளத்தில் மிதந்த சென்னை:
சென்னை முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலையில் வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. எங்கு பார்த்தாலும் நெரிசல். வெறும் ஐந்து கிலோ மீட்டரை கடக்க 3 மணி நேரம் ஆனது. வெளியே போன குழந்தைகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பதறினர். டாக்சி சேவைகள் கட்டணத்தை அதிகப்படுத்தின. சென்னை மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பெரிய சம்பவத்தை செய்தது. மெட்ரோ ரயில் சேவையை நாட, வழக்கமாக இரவு 11 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை இன்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேக வெடிப்பு:
இந்த மழையளவு வானிலை ஆய்வு மையங்களால் கணிக்கப்படவில்லை. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1, 2 தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று மட்டுமே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பதிவாகியுள்ள இந்த மழையளவு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது மேக வெடிப்பினால் பெய்த கனமழை என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்லது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை இடிந்து விழுந்தது:
இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மாலில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து மழை நீர் உள்ளே புகுந்தது, இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். ஆனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.