தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத RBI ஊழியர்கள்.. ‘இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?’.. கனிமொழி எம்.பி கடும் கண்டனம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடியரசு தின விழாவில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சம்பவத்துக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின விழா
நாடு முழுவதும் 73-வது குடியரசு தினம் இன்று (26.01.2022) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
அந்தவகையில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழக அரசின் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் பாடப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம் காட்டியதாக சொல்லப்படுகிறது.
RBI ஊழியர்கள்
இதுகுறித்து செய்தியாளர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, ‘நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நிற்க வேண்டியது கட்டாயமில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது’ என RBI ஊழியர்கள் கூறியுள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி எம்பி கண்டனம்
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?’ என பதிவிட்டுள்ளார்.
ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? https://t.co/wn9B31aalO pic.twitter.com/ftnb9Hefhz
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 26, 2022
அரசாணையை சுட்டிக்கட்டி விளக்கம்
மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகளைத் தவிர, யாராக இருந்தாலும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும்’ என்ற அரசாணையையும் கனிமொழி இணைத்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
அதேபோல், ‘RBI சென்னை தமிழகத்திற்குள் இல்லையா? 2021 டிசம்பர்.17, அரசாணை தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கி குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை’ என்று மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
RBI சென்னை தமிழகத்திற்குள் இல்லையா ?
2021 டிச 17, அரசாணை தமிழ்நாட்டுக்குள் இருக்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
ரிசர்வ் வங்கி குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை. @CMOTamilnadu @chennaipolice_ @RBI pic.twitter.com/xoMGgRD7e4
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 26, 2022
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். அப்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டியது இல்லை’ என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்
