VIDEO: 'தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் ரஜினிகாந்த்...' - சந்திப்பு முடிந்தபின் அவர் பொதுமக்களுக்கு விடுத்த 'ஒரு' வேண்டுகோள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (17-05-2021) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் கடும் மருத்துவ ரீதியான நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.
இதற்குப் பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று சாமானிய மனிதர்கள் முதல் சினிமா பிரபலங்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள், நிறுவனங்களின் முதலாளிகள் வரை தங்களால் இயன்ற வரைக்கும் நிதியுதவி அளித்துள்ளனர். சாதாரண கடைநிலை ஊழியர்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்கினர். குழந்தைகள் விருப்பமான பொருட்கள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த சேமிப்புப் பணத்தை வழங்கினர்.
ஆசிரியர்களும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (17-05-2021) தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
சந்திப்பு முடிந்தபின் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது தனது நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாகத் தெரிவித்த ரஜினிகாந்த், ''கொரோனா என்னும் கொடிய உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் நோயைக் கட்டுப்படுத்த முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்'' எனத் தெரிவித்தார்.
Actor @rajinikanth meets CM @mkstalin, hands over 50 lakh rupees as donation to CM relief fund pic.twitter.com/ZIxUMTmpNT
— Akshita Nandagopal (@Akshita_N) May 17, 2021