'சீனாவில் எம்பிபிஎஸ் படிப்பு'... 'அந்த வலி எனக்கு தெரியும்'... இன்ஸ்டாகிராம் மூலம் நோயாளிகளுக்கு உதவும் சென்னை மாணவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவமனையில் இடமின்றி தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்குச் சென்னை மாணவி செய்து வரும் உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருவொற்றியூர், எர்ணாவூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் பாரதி. இவர் சீனாவில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் அவர், இங்கிருந்து ஆன்லைனில் மூலம் பயின்று வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அவதியுறுவதையும், பலர் உயிரிழந்து வருவதை அறிந்த மருத்துவ மாணவி பாரதி, வேதனையில் ஆழ்ந்து போனார்.
இதையடுத்து மருத்துவ மாணவியான அவருக்கு நோயாளிகள் எவ்வளவு துன்பம் படுவார்கள் என்பதை உணர்ந்த அவர், தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதையடுத்து தனது நண்பர்கள் 10 பேருடன் ஒன்றிணைந்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
அதாவது, சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு எங்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன, ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சிடேட்டர் ஆகியவை எங்கு உள்ளன என்பதைக் கேட்டறிந்து, அந்த விவரங்களை உதவி கேட்கும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்.
அதன்படி, கடந்த 10 நாட்களில் 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியுள்ளார். தன்னார்வலர்கள், மருத்துவ மாணவர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றினால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்கள் உயிரைக் காப்பாற்ற முடியும், என பாரதி தெரிவித்துள்ளார்.