'கொரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை...' - ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு விருது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வரும், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பு விருது வழங்கப்படுகிறது.

கொரோனா காலக்கட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் மிக சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.ஏ.எச்.ஓ (CAHO) விருதுகளை அளிக்க உள்ளது. இந்த விருதுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் அதிகமான மருத்துவமனைகள் விண்ணப்பித்தன. இதில், கொரோனா தொற்று காலத்தில், பணியாளர், பணி அமைவிட பாதுகாப்புக்கு மருத்துவமனைகள் எடுத்த துரித நடவடிக்கைகளின் அடிப்படையில், மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதில், மிகப்பெரிய மருத்துவமனைகளில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கொச்சியை சேர்ந்த அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 300 முதல் 600 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 18,200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த போர்டிஸ் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதுகள் ஆன்லைன் வாயிலாக இன்று வழங்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
