"எனக்கு ஒரு சேலை எடுத்துக்கொடுங்க சார்".. உரிமையுடன் கேட்ட பாட்டி.. நெகிழ வைத்த கலெக்டர்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மூதாட்டி ஒருவர் உரிமையுடன் தனக்கு சேலை வாங்கித்தரும்படி கேட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பு ஏற்றிருக்கிறார் துரை ரவிச்சந்திரன். பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் கள ஆய்விலும் ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார். மேலும், விவசாயிகளின் குறைகளை தீர்ப்பேன் எனவும் பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் எனவும் பதவியேற்பின் போது கூறியிருந்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்திற்கு நேற்று கள ஆய்வுக்காக சென்றிருந்தார் கலெக்டர் துரை ரவிச்சந்திரன். அப்போது, அங்கிருந்த மக்களிடம் அவர் பேசியபோது குறைகள் ஏதேனும் இருக்கிறதா? எனவும் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் கலெக்டர் முன்னர் திடீரென்று ஒரு வயதான மூதாட்டி ஒருவர் சென்று அவர் காலில் விழுந்திருக்கிறார். அப்போது அதிர்ச்சியடைந்த கலெக்டர் அந்த மூதாட்டியை எழ செய்துள்ளார். தொடர்ந்து வீடு கட்டும் திட்டம் குறித்து முறையிட்ட அந்த மூதாட்டி தனக்கு நடைமுறை பற்றி ஏதும் தெரியவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். அப்போது கலெக்டர் ரவிச்சந்திரன் அருகில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் இதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த பாட்டி கலெக்டருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, இதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மூதாட்டி ஒருவர் கலெக்டரிடம் உரிமையுடன் தனக்கு ஒரு சேலை எடுத்துக்கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். இதனால் அருகில் இருந்த அதிகாரிகளே ஆச்சர்யமடைந்த நிலையில் ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். அப்போது அந்த மூதாட்டி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.