மன்னிப்பு கேட்ட நளினி.. 31 வருடம் கழித்து விடுதலை அடைந்தும் கணவரை பிரிந்த துயர நிலை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் இருந்து விடுதலை அடைந்தனர்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 நபர்களுக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை விதித்தது.
பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் உச்சபட்ச தண்டனை உறுதியானது. இதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில் நளினிக்கும், 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது.
இச்சூழலில் தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இந்த வழக்கில் கடந்த மே.18 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதே சட்டப்பிரிவின் கீழ், தங்களையும் விடுதலை செய்யவேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுக்குறித்து தமிழக மற்றும் மத்திய அரசு பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் வழக்கு 11 ஆம் தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், 30 ஆண்டுகளாக சிறை தண்டனை , ஆறு பேரின் நன்னடத்தை , சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறையை மீறாதது, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சி நாவல்பட்டு இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இதனால் விடுதலை பெற்ற பின்னரும் நளினி & முருகன் இருவரும் சந்தித்து பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் NDTV செய்தியில் அளித்துள்ள பேட்டியில் நளினி, தனது கணவரை சந்திக்க திருச்சி செல்ல உள்ளதாக குறிப்பிடப்பிட்டுள்ளார். மேலும் ஶ்ரீ பெரும்புதூர் சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும் இங்கிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆக உள்ளதாகவும் கூறினார்

மற்ற செய்திகள்
