காரைக்குடி அருகே வழக்கறிஞர் தம்பதியை தாக்கிய இரண்டு வாலிபர்களை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு. இவரது மனைவி விஜயஸ்ரீ. இருவரும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகே காசி - ராணி தம்பதி வசித்து வந்தனர். வழக்கறிஞரான விஜயஸ்ரீ, ராணி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராணி தகாத உறவின் காரணமாக வீட்டை விட்டு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
சண்டை
இதனை அடுத்து, ராணி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து முன்கூட்டியே விஜயஸ்ரீ - குமரகுரு தம்பதிக்கு தெரியும் என்று சொல்லி அவரிடம் காசி மற்றும் அவரது தம்பி கணபதி ஆகிய இருவரும் தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கணபதி அவரது உறவினரான விக்கி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் விஜயஸ்ரீ மற்றும் அவரது கணவரை தாக்கியதாகவும் அப்போது தடுக்க வந்த மாரி என்பவரை அரிவாள் கொண்டு வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சிகிச்சை
கணபதி மற்றும் அவரது உறவினர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் தம்பதியை அருகில் இருந்தவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மாரி என்பவரை தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்து உள்ளனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜி, தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அண்ணி வீட்டை விட்டு சென்றுவிட்ட நிலையில், கோபத்தில் கொழுந்தன் வழக்கறிஞர்களாக இருக்கும் தம்பதியை தாக்கிய சம்பவம் காரைக்குடி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.