ஆற்றில் தத்தளித்த 9 பேர்.. தனி ஒருவனாக போராடி அனைவரையும் காப்பாற்றிய நபர்.. "குல சாமிப்பா நீ" .. நெகிழும் கிராம மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உப்பாற்றில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்த 9 பேரை தனி ஒருவராக காப்பாற்றி உள்ளார் அந்தப் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர். தற்போது அவரை பொதுமக்கள் கொண்டாடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னைக்காயல் அருகே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ளது குட்டித் தீவு ஒன்று உள்ளது. உப்பாற்றுக்கு அடுத்ததாக அமைந்துள்ள இங்கே புகழ்பெற்ற தோமையார் ஆலையம் இருக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்திற்கு படகின் மூலமாக சுற்றுலாவாசிகள் வந்துசெல்வதுண்டு.
தவக்காலம்
சாம்பல் புதன் நாளில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் உயிர்த்தெழுதல் ஞாயிறு வரையிலான 40 நாட்களுக்கு தவ காலம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களின் போது, கிறிஸ்தவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபடுவர்.
மனம் மற்றும் உடலின் ஆசைகளைக் கட்டுப்படுத்தி பிறருக்கு உதவி செய்வதை மையமாக கொண்டு 40 நாட்கள் கிறிஸ்து மக்கள் வழிபடும் தவக் காலத்தில் இந்த புனித தோமையார் ஆலையத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.
காப்பாத்துங்க
அப்படி, சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் புனித தோமையார் ஆலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, உப்பாற்றில் நீரோட்டம் அதிகமானதால் அதில் 9 பெண்கள் சிக்கி உயிருக்கு போராடி உள்ளனர். அந்த நிலையில் தனது பைபர் படகில் அப்பகுதிக்கு தற்செயலாக சென்ற ஜேமன் என்ற மீனவர் பெண்கள் ஆற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனடியாக தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்று நீரில் குதித்து, ஒவ்வொருவராக காப்பாற்றி தனது படகில் ஏற்றியிருக்கிறார். 9 பேரையும் துரிதமாக மீட்ட ஜேமன், அவர்களை புன்னைக்காயல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்.
பாராட்டு
சரியான நேரத்தில் ஆறில் தத்தளித்த நபர்களை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால் 9 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தங்களுடைய உயிரை காப்பாற்றிய ஜேமனுக்கு கண்ணீர்மல்க அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, ஆற்றில் தத்தளித்த நபர்களை தனி ஒருவராக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஜேமனை புன்னைக்காயல் மக்கள் பாராட்டி வருகின்றனர்.