"என்ன மண்ட ஒரு மார்க்கமா இருக்கு.. இங்க வாங்க".. ஏர்போர்ட் அதிகாரிகளை அதிரவிட்ட இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதலைக்குள் வைத்து 15.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திவந்த இளைஞரை விமான நிலையத்தில் கைது செய்திருக்கிறது சுங்கத் துறை. இந்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்து உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து உத்திர பிரதேச தலைநகர் லக்னோ விமான நிலையத்திற்கு வந்திருக்கிறது இண்டிகோ விமானம் ஒன்று. அதில் பயணித்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டதால் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்.
இதனை அடுத்து அவரை அதிகாரிகள் விசாரிக்கையில் அவர் பதற்றமடைந்திருக்கிறார். அப்போது அவர் கூறிய தகவல்கள் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விக்
இது குறித்து பேசிய விமான நிலைய அதிகாரி ஒருவர்," அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்கு சந்தேகத்தை அளித்தன. அதனால் அவரை சோதனைக்கு உட்படுத்தினோம். மேலும், அவருடைய தலைமுடி வித்தியாசமாக இருந்ததையும் சக அதிகாரிகள் கண்டு சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கேள்வி கேட்டதற்கு அந்த இளைஞர் பதற்றத்துடன் பதில் அளித்தார். அதை தொடர்ந்து அவரது தலைமுடி உண்மையானது அல்ல என்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த விக்-ற்குள் 291 கிராம் தங்கத்தினை பசை வைத்து ஒட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.
பணத்திற்காக
இந்த சம்பவம் குறித்து பேசிய சுங்கத்துறை துணை கமிஷ்னர் அஜய் குமார் மிஸ்ரா," கடந்த 5 மாதங்களாகவே பல இளைஞர்கள் இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டு வருவதை எங்களது குழு கண்காணித்துவருகிறது. 15 முதல் 20 ஆயிரம் ரூபாய்க்காக இதுபோன்ற கடத்தலில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் உயர் அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது" என்றார்.
இதனை அடுத்து தலைக்குள் தங்கத்தை மறைத்து கடத்திவந்த மீரட் பகுதியை சேர்ந்த அந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விக்-ற்குள் வைத்து தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.