"நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்..." அறிக்கை வெளியிட்ட 'சசிகலா'... 'தமிழக' அரசியல் களத்தில் 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அது மட்டுமில்லாமல், பெங்களூர் சிறையில் இருந்த சசிகலாவும் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சென்னை வந்தடைந்ததும் தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பானது. அது மட்டுமில்லாமல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினர்.
இதனால், சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு சசிகலா தேர்தலை சந்திப்பார் என்ற தகவலும் ஒரு பக்கம் பரபரத்தது. இந்நிலையில், தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ' நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் அம்மா புரட்சி தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்' என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை குறித்த தகவலை டிடிவி தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.