‘பொங்கல் பரிசு ரூ.1000’.. ‘இலவச வேட்டி, சேலை’.. தொடங்கி வைத்தார் முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 29, 2019 11:19 AM
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது. இதனை சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் அறிவித்தார். இதனை அடுத்து இதற்காக ரூ.2,363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் முதல்கட்டமாக 5 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று (29.11.2019) தொடங்கி வைத்தார். இதனுடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புதுண்டு வழங்கப்பட்டது. மேலும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் இன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் என்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.