‘செல்லும் இடமெல்லாம் எங்க திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறோம்’!.. ‘ஆனா அவங்க..!’.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மக்கள் சுபிக்ஷமாக வாழ விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நடைமுறைப்படுத்த உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மாதவரம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘செல்லும் இடங்களில் எல்லாம் நாங்கள் கொண்டுவந்த திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் திமுகவினர் செல்லும் இடமெல்லாம் பழி சொல்லி வாக்கு கேட்கின்றனர்’ என கூறினார். மேலும் சமீபத்தில் பெய்த மழையால் வேளச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததை முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும், சென்னை மாநகர மக்கள் சுபிக்ஷமாக வாழ விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 308 சாலை பணிகள், 247 சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 173 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.