'சினிமா தியேட்டர்ல டிக்கெட் வாங்க முடியாது'...'தியேட்டர் உணவுக்கும் விலை நிர்ணயம்'... அமைச்சர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 02, 2019 04:24 PM
தமிழகத்தில் நட்சத்திர நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குனர்களின் படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு விற்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுவது வழக்கம். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது.
அதே போன்று திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்கள். இந்த புகார்களை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ''தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவே, ஆன்லைனில் மூலம் டிக்கெட் வழங்கப்படும் முறை கொண்டுவரப்பட இருப்பதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும் திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.