'பிரியாணி'க்கு ஆசைப்பட்டு 'ரூ 40 ஆயிரம்' போச்சே'... 'சென்னை 'கல்லூரி மாணவி'க்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Jul 05, 2019 01:43 PM
பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவியிடம், நூதன முறையில் ரூ.40 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டை சேர்ந்தவர் ப்ரியா அகர்வால். கல்லூரி மாணவியான இவர் நேற்று காலையில் பிரியாணி சாப்பிட எண்ணியுள்ளார். இதையடுத்து வடபழனியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்து ‘உபர் ஈட்ஸ்’ இணையதளம் மூலம் 76 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி ஆர்டர்செய்துள்ளார். அதற்கான தொகையினை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டதாக அவருக்கு குறுந்செய்தி வந்துள்ளது.
இதையடுத்து கூகிள் தேடுதல் மூலமாக "உபர் ஈட்ஸ்" சேவை எண்ணில் தொடர்பு கொண்டு ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது , எனவே எனது பணம் 76 ரூபாயை திரும்ப செலுத்துங்கள் என கேட்டுள்ளார். ஆனால் எதிர்முனையில் பேசிய நபர் 76 ரூபாய் தனியாக திரும்பத் தரமுடியாது. ரூ. 5000 செலுத்துங்கள் 5,076 ரூபாயாக உங்களது வங்கி கணக்கில் வந்து விடும் என கூறியுள்ளார். இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட பிரியா எனது பணம் எப்போது திரும்ப வரும் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணம் கிரெடிட் ஆகவில்லை. மீண்டும் 5,000 பணம் செலுத்துங்கள் என கூற, இதே போன்று 8 முறை 5 ஆயிரத்தை செலுத்தியுள்ளார் ப்ரியா. மொத்தமாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்திய அவர், மீண்டும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் நிலைமையை உணர்ந்த பிரியா, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்.
இதனைத்தொடர்ந்து வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் இந்த நூதன மோசடி புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி பிரிவிற்கு மாற்றினர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சேவை மைய எண் மூலமாகவும், பணப்பரிவர்த்தனை செயலிகளான கூகுள் ப்ளே, போன் பே, பேடிஎம் போன்றவைகளை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஆன்லைனில் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர்.
எனேவ மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே இப்படியா ஏமாறுவது, கொஞ்சம் நிதனமாக சிந்தித்திருந்தால் நாற்பதாயிரம் ரூபாயை பறிகொடுக்காமல் இருந்திருக்கலாம் என காவல்துறையினர் ஆதங்கபட்டுள்ளனர்.