'அன்று கலைஞர் போட்ட விதை'... 'காரில் கையெழுத்து போட்ட முதல்வர் ஸ்டாலின்'... புதிய உச்சத்தை தொட்ட ஹூண்டாய்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹூண்டாயின் ALCAZAR காரை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாகக் காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஹூண்டாய் பன்னாட்டுத் தொழிற்சாலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்தார்.
அங்கு ஒரு கோடியாவது காருக்கான உற்பத்தியைத் தொடக்கி வைத்தார். அதோடு ஹூண்டாயின் ALCAZAR காரை அறிமுகம் செய்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த காரில் கையெழுத்திட்டார். ஒரு கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம்.
கார் தயாரிப்பில் மட்டுமின்றி சேவை மனப்பான்மையிலும் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தைப் போன்று மற்ற நிறுவனங்களும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு. தமிழகத்தின் மீது உலக நாடுகளின் கவனம் குவியும் வகையில் திட்டங்களை வகுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் அதிக முதலீடுகளைப் பெறும் வகையில் அரசின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல்வேறு முடிவுகள் ஆய்வு செய்து மேம்பாடு திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வருவேன். தொழில்துறையில் தமிழகம் முன்னேற்றம் அடைய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.