'சென்னையில் வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகள்'... 'அவதிப்படும் பொதுமக்கள்'... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆவடி பகுதியில் வீடுகளுக்குள் படையெடுக்கும் வண்டுகளால், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம் இந்துக்கல்லூரி அருகே மத்திய அரசுக்குச் சொந்தமான உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கிலிருந்து வெளியேறும் வண்டுகள், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நுழைந்து விடுகிறது.
தற்போது கொரோனா காரணமாகக் குறைவான பணியாளர்களே வேலை பார்ப்பதால், உணவு கிடங்குகளில் பெருக்கம் அடையும் வண்டுகளை மருந்து தெளித்துக் கட்டுப்படுத்த போதிய பணியாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சேமிப்பு கிடங்கிலிருந்து அருகில் உள்ள பட்டாபிராம், பாரதி நகர், திருவள்ளுவர் நகர், சத்திரம் பகுதி, கக்கன்ஜி நகர், தீனதயாள் நகர், அண்ணா நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வண்டுகள் சாரை சாரையாகப் படையெடுத்து வருகிறது.
இது சமைத்து வைக்கப்படும் உணவுகள், குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் எனப் பலவற்றில் வந்து விழுகிறது. தற்போது ஊரடங்கும் கடுமையாக உள்ளதால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு இந்த வண்டுகள் பெரும் சோதனையாக அமைந்துள்ளது. அதிலும் சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
