இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி... சென்னை மைதானத்தில் இது வேண்டாம்... 'சவுரவ் கங்குலிக்கு கடிதம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 11, 2019 05:19 PM
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி, வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும், முதல் ஒருநாள் போட்டி, வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலிக்கு, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய டி20 போட்டிகள், கடந்த 6-ம் தேதி ஹைதராபாத்திலும், 8-ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெற்றது. அப்போது பான் பஹார், சைனி கைனி உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டது. பான் மசாலா என்கிற போலியான பெயரில், இந்த புகையிலை பொருட்களின் விளம்பரங்கள், கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தன. கிரிக்கெட் விளையாட்டை பின்பற்றும் பல கோடி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக வைக்கும் இந்த விளம்பரங்களில் இருந்து, இந்திய கிரிக்கெட் வாரியம், தனது சமூகப் பொறுப்பை உணர்ந்து விலகி இருக்க வேண்டும்.
இதேபோல், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் போட்டியிலும், இந்தப் புகையிலை தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, புகையிலைப் பொருள் தொடர்பான விளம்பரங்கள் சென்னை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
