'பைப்ல தண்ணி தானே வரும்னு அசால்ட்டா நின்ருக்காங்க...' 'திடீர்னு உள்ள இருந்து பாய்ஞ்சு வந்துருக்கு...' 'அதுவும் உயிரோட...' - அதிர்ச்சியில் உறைந்து நின்ற மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற பகுதிக்கு அருகே இருக்கும் சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மரவபாளையம். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். மேலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு என்ன காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் பெண்கள் சிலர் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீருடன் சாரைப்பாம்பு வந்துள்ளது. நீர் தானே வருகிறது என்று வழக்கம்போல் நின்றவர்கள் பாம்பு வந்ததும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதுமட்டுமல்லாமல் பாம்பு உயிருடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் பெண்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
பாம்பு மட்டுமல்லாமல், அதே குழாயில் இருந்து தவளையின் சிதறிய உடல் பாகங்களும் வந்ததும் ஊர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய மரவபாளையம் கிராம மக்கள், 'கடந்த சில நாட்களுக்கு முன்பும், இதேபோல குடிநீர் குழாயில் இருந்து தவளையின் சிதறிய உடல் பாகங்கள் வெளியே வந்தன. கடும் துர்நாற்றத்துடனான குடிநீரை பிடிக்காமல் திரும்பிவிட்டோம். இதேபோல சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.