'உங்க அக்காவ கொன்னுடுவோமா..?' 'வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து காதலனை வரவழைத்த தங்கை...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் அக்கா மற்றும் தங்கையை காதலித்து வந்த கல்லூரி இளைஞர், தங்கையின் கையால் அக்காவையே கொலை செய்ய வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனி என்பவர் நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர், இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு மோனிஷா என்ற பொறியியல் கல்லூரியில் படிக்கும் 19 வயதான மகளும், பிளஸ் டூ படிக்கும் 17 வயது மகளும் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தாய், தந்தை இருவரும் கூலிவேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவர்களின் வீட்டிலிருந்து மோனிஷாவின் தங்கை அலறியதால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஓடி சென்று பார்க்கும் போது, சிறுமியின் கை கிழிக்கப்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டு இருந்துள்ளது.
இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அவர்களின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியத்தில் தனக்கும் தனது அக்காவிற்கும் சண்டை வந்ததால் இருவரும் மாறி மாறி கையை கிழித்துக்கொண்டோம் என மோனிஷாவின் தங்கை கூறியுள்ளார். ஆனால் சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் மீண்டும் சிறுமியை கேள்விகேட்டு வந்ததால் சில திடுக்கிடும் தகவல்களை அளித்து அப்பகுதி மக்களையும், பெற்றோரையும் குலைநடுங்க செய்துள்ளார்.
பழனி குடும்பம் வசிக்கும் பகுதியை சேர்ந்த 19 வயதான ராகுல் என்பவர் மோனிஷாவின் கல்லூரியில் தான் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மோனிஷா மீது ராகுலுக்கு காதல் ஏற்பட, தன்னை காதலிக்குமாறு மோனிஷாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ராகுலின் பழக்க வழக்கம் பிடிக்காமல் அவரை காதலிக்க மோனிஷா மறுத்துள்ளார்.
மோனிஷாவிற்கு தங்கை உள்ளதை அறிந்த ராகுல் பள்ளி படிக்கும் அவளின் வழியாக அக்கா மோனிஷாவிற்கு பல வகையில் காதல் தூது விட்டுள்ளார். இதை எல்லாம் கண்டுகொள்ளாத மோனிஷா தனது தங்கையையும் கண்டித்து பேசியுள்ளார்.
இனி மோனிஷாவிடம் காதலை சொல்லி பயனில்லை என எண்ணி, மோனிஷாவின் தங்கையை காதல் வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளார். ராகுலும் தனது தங்கையும் தொடர்பில் இருப்பதை அறிந்த மோனிஷா ராகுலின் பழக்கவழக்கம் சரியில்லை எனக்கூறி தங்கையை கண்டித்துள்ளார். மோனிஷாவின் தங்கை நடந்த சம்பவங்களை ராகுலிடம் தெரிவிக்க, நம் காதலுக்கு தடையாய் இருக்கும் 'உங்க அக்காவை கொலை செய்யலாமா' என கேட்க உடனே இந்த பெண்ணும் சரி என சொல்லியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று யாரும் வீட்டில் இல்லாததால் ராகுலை அழைத்து வந்துள்ளார். ராகுலை பார்த்தவுடன் கோபமடைந்த மோனிஷா 'வீட்டை விட்டு வெளியே போ' என கூறி தன்னுடைய கட்டிலின் மேல் அமர்ந்துள்ளார். உடனே மோனிஷாவின் அருகில் வந்த ராகுல் அவரின் கால்களை பிடித்தும், அவரது தங்கையை தலைகாணியால் முகத்தை மூடவும் கூறியுள்ளார்.
அலறி துடித்த மோனிஷாவின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை பார்த்த ராகுல் தனது காதலியை விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். செய்வதறியாது தவித்த மோனிஷாவின் தங்கை அருகில் இருந்த பிளேடால் இருவரின் கையையும் அறுத்து கொண்டு சண்டை என நாடகம் ஆடியுள்ளதாக நாமக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 19 வயதுடைய ராகுலை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் மேலும் 17 வயதுடைய மோனிஷாவின் தங்கையை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
தனது காதலுக்காக கண்முடித்தனமாக உடன் பிறந்த அக்காவையே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் நாமக்கல் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
