'OMR சாலையிலுள்ள பிரபல 'ஐடி நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு' கொரோனா'... 'அதிர்ச்சியில் IT நிறுவனங்கள்'... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன???
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 748 ஆண்கள், 541 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12 வயதுக்கு மேற்பட்ட 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 221 முதியவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 8 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் சென்னை OMR சாலையிலுள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
தற்போது தொற்றுக்கு ஆளான ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் இயங்கும் பன்னாட்டுத் தொழில்நுட்ப (MNC) நிறுவனங்கள் பலவும் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்துள்ளது.
ஆனால் சென்னையில் உள்ள சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்கள் அவ்வப்போது பணிக்கு வந்து சென்றுள்ளார்கள். குறிப்பாகத் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் சில ஊழியர்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். அதுபோன்ற ஊழியர்களுக்குத் தான் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு 2.41 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்யச் சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோன்று தொழில் நுட்ப நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து சுகாதாரத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.