"அவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க.." அஸ்வினை மறைமுகமாக சீண்டிய யுவராஜ் சிங்??.. கமெண்ட்டில் கொந்தளித்த ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் நேற்று (14.04.2022) நடைபெற்றிருந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தன.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக,கேப்டன் ஹர்திக் பாண்டியா நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார்.
இறுதி வரை களத்தில் நின்ற ஹர்திக், 87 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அதே போல, குஜராத் அணியும் 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் என்ற சிறந்த ஸ்கோரை எட்டி இருந்தது.
புள்ளிப் பட்டியலில் முதலிடம்
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடி அரை சதமடித்திருந்தார். அவரும் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் அணி. இறுதியில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுக்க, 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
அது மட்டுமில்லாமல், இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதனிடையே, இந்த போட்டியின் போது ஒரு வீரரை பாராட்டி யுவராஜ் சிங் ட்வீட் செய்ய, அதிலுள்ள கடைசி வரி ஒன்று, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்லர் செய்த செயல்
குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஹர்திக் பாண்டியா அடித்த பந்து ஒன்று, பவுண்டரி அருகே சென்றது. அப்போது அதனை ஜோஸ் பட்லர் தடுத்து நிறுத்தினார். ஆனால், தன்னுடைய கால் பவுண்டரி லைனில் பட்டதாக ஜோஸ் பட்லருக்கு சந்தேகம் வரவே, களத்தில் இருந்த நடுவரிடம் பவுண்டரி சென்றதா என பரிசோதித்து பார்க்கும் படி, நடுவரிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அது பவுண்டரி என்பதும் உறுதி ஆனது.
ஜென்டில்மேன் இன்னும் இருக்காங்க..
பட்லரின் இந்த நேர்மைமிக்க செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பட்லரின் செயல் பற்றி ட்வீட் செய்த யுவராஜ் சிங், "கிரிக்கெட் போட்டியில் இன்னும் ஜென்டில்மேன்கள் உள்ளனர். மற்ற வீரர்கள் ஜோஸ் பட்லரை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, அணியில் உள்ளவர்களே அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
பட்லரின் நேர்மை குணத்தை பாராட்டிய யுவராஜ் சிங், கடைசி வரியில் அணியினரும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். அவர் ராஜஸ்தான் அணியை குறிப்பிடுகிறாரா அல்லது இங்கிலாந்து அணியை குறிப்பிடுகிறாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம், ரசிகர்கள் பலரும் ராஜஸ்தான் அணியிலுள்ள அஸ்வினை தான் மறைமுகமாக யுவராஜ் சிங் குறிப்பிடுகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
யுவராஜ் யார சொல்றாரு??
பஞ்சாப் அணிக்காக அஸ்வின் ஆடிய போது, ராஜஸ்தானில் இருந்த பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்திருந்தது, பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. ஒரு பக்கம் அஸ்வினுக்கு ஆதரவும், மறுபக்கம் அஸ்வினுக்கு எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. இதனைத் தான் யுவராஜ் சிங் குறிப்பிட்டு அஸ்வினை தான் சொல்கிறார் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை, மீண்டும் யுவராஜ் சிங் ஞாபகப்படுத்துவதற்கான தேவை இல்லை என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும், யுவராஜ் சிங் ட்வீட்டில், தொடர்ந்து ரசிகர்கள் பல விதமான கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | நாசா பகிர்ந்த ஃபோட்டோ.. "இது.. அதோட கால்தடம் மாதிரியே இருக்கே.." அரண்டு போன நெட்டிசன்கள்