"நல்லா ஆடியும் வாய்ப்பு இல்ல.." 'தமிழக' வீரர் விஷயத்தில் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு.. கொதித்து எழுந்த ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி இருந்தன.
இதில், ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்களின் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி, ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.
முதலிடத்திற்கு முன்னேறிய குஜராத் அணி
ஆனால், குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தனர். கடைசியில் டேவிட் மில்லரும் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். தொடர்ந்து, இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
ஜோஸ் பட்லர் மட்டும் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடி ரன் சேர்த்து அவுட்டாக, மற்ற வீரர்கள் ரன் சேர்க்கத் தவறினர். சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழவே, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்திருந்தது.
கேள்வி எழுப்பிய ரசிகர்கள்
இதனால், குஜராத் அணி வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனிடையே, குஜராத் அணி எடுத்த முடிவு ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் கேள்விகளை உருவாக்கி உள்ளது. குஜராத் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் களமிறங்கி இருந்தார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 ரன்கள் மட்டும் அடித்திருந்த விஜய் ஷங்கர், ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருந்தார்.
தொடர்ந்து, அடுத்த இரண்டு போட்டிகளில் விஜய் ஷங்கருக்கு பதிலாக, மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்ஷன், குஜராத் அணியில் களமிறங்கி இருந்தார். இவரது அறிமுக ஐபிஎல் தொடர் இது தான்.தன்னுடைய முதல் போட்டியில் 35 ரன்கள் எடுத்து அசத்தி இருந்த சாய் சுதர்ஷன், இரண்டாவது போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்தார். விஜய் ஷங்கரை ஒப்பிடும் போது, சிறப்பாக ஆடி வந்த சாய் சுதர்ஷனை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி களமிறக்கவில்லை.
திரும்பவும் சொதப்பல்
மாறாக களமிறங்கிய விஜய் ஷங்கர், 2 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஒரு முறை சொதப்பி உள்ளார். குஜராத் அணி எடுத்த இந்த முடிவு தான், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது. தனது வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திய சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்காமல், தொடர்ந்து சொதப்பி வரும் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு வழங்கியது ஏன் என ஹர்திக் பாண்டியாவை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு வேளை அவர் காயத்தில் இருப்பதால், விஜய் ஷங்கர் மீண்டும் களமிறங்கி இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இருந்தாலும், ஃபார்மில் இருக்கும் இளம் வீரரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்வி தான் மிகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.