‘பவுலர்களை நடுங்க வைக்க இவர் மாதிரி ஒருத்தர்தான் தேவை’!.. இளம்வீரருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தினேஷ் கார்த்திக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இளம்வீரர் இஷான் கிஷனை புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 46 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை வாசிங்டன் சுந்தர் மற்றும் சர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார்.
இந்த நிலையில் இளம்வீரர் இஷான் கிஷன் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் Sky Sports சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், ‘2-வது டி20 போட்டியில் இஷான் கிஷன் எந்தவித பயமும் இல்லாமல் பந்துகளை எதிர்கொண்டார். குறிப்பாக, எந்த பந்தை அடிக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. டாப் ஆர்டரில் இவரைப் போல ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் நிச்சயம் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஜோப்ரா ஆர்ச்சரை முதல் பந்து முதலே சிறப்பாக எதிர்கொண்டு நெருக்கடி உண்டாக்கினார்’ என தினேஷ் கார்த்திக் கூறினார்.
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று வெற்றி பெற்றது. அதேபோல் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், டாஸ்தான் வெற்றியைத் தீர்மானிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ‘கேப்டன்கள் பேட்டிங்கிற்கு பயிற்சி எடுப்பதுபோல், டாஸ் வெல்வதற்கும் போதிய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பிட்சில் முதல் சில ஓவர்களின் போது ஈரப்பதம் இருப்பதால் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்’ எனக் கூறினார்.