"இப்போதைக்கு 'ஐபிஎல்' தேவை தானா??.." 'கில்க்றிஸ்ட்' போட்ட 'ட்வீட்'.. கேள்விகளை எழுப்பிய 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 9 ஆம் தேதி தொடங்கிய 14 ஆவது ஐபிஎல் (IPL) தொடர், தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்றின் காரணமாக, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், உருமாற்றம் செய்யப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா தொற்று, இந்தியாவில் மிகவும் வேகமாக தற்போது பரவி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில் 24 மணி நேரத்தில், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் இந்த தொற்று மூலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள், கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. அதே வேளையில், இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால், ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்றிஸ்ட் (Adam Gilchrist), இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.
Best wishes to all in India 🇮🇳 Frightening Covid numbers. #IPL continues. Inappropriate? Or important distraction each night? Whatever your thoughts, prayers are with you. 🙏
— Adam Gilchrist (@gilly381) April 24, 2021
அதில், 'இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இது பொருத்தமற்றது இல்லையா?. அல்லது தினந்தோறும் இரவு நேரத்தில் மட்டும் கவனத்தை திசை திருப்ப வேண்டி நடைபெறுவதா?. எதுவாக இருந்தாலும், எனது பிரார்த்தனைகள் உங்களுடன் உள்ளன' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கில்க்றிஸ்ட்டின் இந்த கருத்திற்கு, ரசிகர்கள் பலர், பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மேலும் சிலர், இப்படிப்பட்ட சமயங்களில், மக்கள் வெளியே இறங்காமல், வீட்டிலேயே இருந்து நேரத்தை கழிக்கவும், எப்போதும் சோகமான செய்திகளை கவனிக்கும் மக்களின் கவனத்தை திருப்ப, ஐபிஎல் போட்டிகள் உதவுகிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.