'ரிஜக்ட் பண்ணிய சாப்பல்'.. 'தட்டிக் கொடுத்த தோனி'.. ஆஸி டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவாரா சாஹர்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Nov 11, 2019 10:40 PM
இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியுடனான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் இந்த தொடரின் வெற்றியை உறுதிப்படுத்தும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரரான தீபக் சாஹர் 7 ரன்கள் மட்டுமே இழந்து, 6 விக்கெட்களை எடுத்தார்.

தனது 18வது வயதில் ராஜஸ்தான் ரஞ்சி அணிக்காக 2008-ஆம் ஆண்டு தீபக் சாஹர் விளையாட முற்பட்டார். அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பொறுப்பில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் சாஹருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு தகுதி இல்லை எனக் கூறி ராஜஸ்தான் ரஞ்சி அணிக்கு தேர்வு செய்யவில்லை.
ஆனால் அதன் பின் 2010-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் தீபக் சாஹர் இடம் பெற்றார். ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தினார். பின்னர் சையத் முஸ்தாக் அலி டி20 போட்டியில் இவர் மிக சிறப்பாக விளையாடியதால் 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இவர் விளையாடியதால், இவருக்கு தோனியின் ஆலோசனை கிடைத்தது. இவ்வாண்டு நடைப்பெற்ற ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடிய தீபக் சாஹர் 22 விக்கெட்களை வீழ்த்தி முக்கிய பந்துவீச்சாளராக வலம் வந்தார். இந்தாண்டு இவர் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துவீசியபோதும் ஒரு போட்டியின்போது இவரை தோனி திட்டுவது போல வீடியோ வெளியானது.
இதுகுறித்து தீபக் சாஹர் பேசும்போது திரணிக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 நோ பால்களை வீசியதால் ஒரு கேப்டனாக தோனி தன் மீது கோபப்பட்டார் என்று கூறியிருந்தார். எனினும் தீபக் சாஹரின் சிறப்பான பந்துவீச்சினால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
