'இளம்' வீரருக்கு கிடைத்த பொன்னான 'வாய்ப்பு'!.. "இன்னைக்கி அவ்ளோ சந்தோசமா இருக்கேன், ஆனா 'அப்பா' பக்கத்துல இல்லையே.." மனமுடைந்த 'சக்காரியா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, அடுத்த ஒரு வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த போட்டிக்காக இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.

இந்த போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ளவுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி ஆடவுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கும் வேண்டி, சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் வரை, இந்திய அணி இங்கிலாந்தில் தங்கியிருக்கும்.
இதனிடையே, இங்கிலாந்து தொடர்களில் தேர்வாகாத இந்திய வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 தொடர்களில் மோதவுள்ளது. இதற்கான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களான படிக்கல், கெய்க்வாட், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, இந்த சீசனில் களமிறங்கிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா (Chetan Sakariya), வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில், தனது விடாமுயற்சி மூலம், இன்று இந்திய அணி வரை இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தில் தேர்வாவதற்கு முன்னதாக, சக்காரியாவின் இளைய சகோதரர் தற்கொலை செய்திருந்தார். அதே போல, ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தையும் உயிரிழந்தார். இந்நிலையில், தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது பற்றி, சேத்தன் சக்காரியா மனம் திறந்துள்ளார்.
'இதனைப் பார்க்க எனது தந்தை இருந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் தான், நான் இந்திய அணிக்காக ஆட வேண்டுமென ஆசைப்பட்டார். நான் இன்று அவரை அதிகம் மிஸ் செய்கிறேன். கடந்த ஓராண்டு காலத்தில், எனது வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை கடவுள் காணச் செய்தார். எனது இளைய சகோதரர் இழந்த ஒரு மாத காலத்தில், ஐபிஎல் தொடரில் தேர்வானேன். கடந்த மாதம், எனது தந்தையை இழந்தேன். கடவுள் எனக்கு இப்போது இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
எனது தந்தை, மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த போது, அவருடன் 7 நாட்கள் நான் இருந்தேன். அவரது மறைவு, நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடமாகும். இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பை, மறைந்த தந்தைக்கும், தொடர்ந்து என்னை கிரிக்கெட் ஆட அனுமதித்த தாய்க்கும் சமர்ப்பித்துக் கொள்கிறேன்' என சக்காரியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சக்காரியா, 'ஐபிஎல் தொடருக்கு பிறகு, என்னை பற்றி மக்கள் அதிகம் பேசிய விதத்தைக் கொண்டு,குறைந்தபட்சம் இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக முடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்படி இலங்கை தொடருக்கான அணியில் தேர்வாவேன் என எதிர்பார்க்கவில்லை. என்னால் முடிந்த அளவு, சிறப்பான ஆட்டத்தைக் கொடுப்பேன்' என சக்காரியா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
