“அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்லலாம் வாங்க முடியாது.. ஐபிஎல் நடந்தாலும் இல்லனாலும் தல தோனி”.. ஆகாஷ் சோப்ராவின் அசத்தல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 17, 2020 10:57 PM

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆகும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

what will happen to MSDhoni if IPL2020 get cancelled, Akash Chopra

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் இதன் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன‌. மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் முழுவதுமாக ரத்து செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்னாகும் என்கிற கேள்வியை பலர் எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.‌ இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தோனியை போன்றதொரு வீரருக்கு ஐபிஎல் போன்ற விளையாட்டுக்கள் ஒருபோதும் அளவுகோலாக இருக்காது. ஒருவேளை ஐபிஎல் தொடரில் தோனி அதிக ரன்களைக் குவிக்கும் பட்சத்தில் தோனியை இந்திய அணிக்கு தேர்வு செய்யுமாறு மற்ற நிபுணர்கள் பரிந்துரை செய்வார்கள். ஆனால் தோனிக்கு, தான் என்ன செய்கிறோம், அணிக்கு திரும்ப வேண்டுமா வேண்டாமா என்பது பற்றியெல்லாம் தெரியும்.

இதற்கெல்லாம் ஐபிஎல் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் மீண்டும் தனது அணிக்கு திரும்ப விரும்பினால் தன்னுடைய இருப்பினை அவரே வெளிப்படுத்தி விடப்போகிறார். அவரை தேர்வு செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினால் தேர்வு குழுவினரால் தானாகவே அவர் தெரிவு செய்யப்படுவார். ஏனெனில் அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்டில் இருந்தெல்லாம் வாங்கி விட முடியாது. அவர் மிகப் பெரிய அனுபவ வீரர். வரும் உலகக்கோப்பை டி20 அணிக்கு தோனி தேவை என்று அவர் நினைத்தால், ஐபிஎல் தொடரில் அவர் பங்கு பெற்றாலும் பெறாவிட்டாலும் அவர் அணிக்கு மீண்டும் திரும்பி விடுவார்’ என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Tags : #MSDHONI