ஐபிஎல் டிக்கெட்டுகள் 'விற்பனை' நிறுத்தம்... போட்டி நடக்குமா? நடக்காதா?... ரசிகர்கள் கவலை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்து இருப்பதால், போட்டிகளை தள்ளி வைக்கும்படி மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் 29-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆனால் மஹாராஷ்டிரா அரசு டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைக்கும்படி கூறியதால், ஐபிஎல் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
மறுபுறம் கர்நாடக அரசு பெங்களூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான சூழல் உள்ளதா? என்று மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைப்பது அல்லது மூடிய மைதானங்களுக்குள் போட்டியை நடத்துவது இந்த இரண்டு வழிகள் தான் தற்போது பிசிசிஐ முன் உள்ளன.
ஆனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவதில் பிசிசிஐக்கு உடன்பாடு இல்லை. இதனால் போட்டி தள்ளி வைக்கப்படுமா? இல்லை திட்டமிட்டபடி ஐபிஎல் நடைபெறுமா? என்பது குறித்து பிசிசிஐ இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.