‘அன்னைக்கு 2 விக்கெட், இப்போ 3’.. ‘நடராஜனை பார்த்தால்..!’.. கேப்டன் ‘கோலி’ சொன்ன வார்த்தை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜடேஜாவுக்கு மாற்று வீரராக சாஹல் விளையாடியது குறித்தும், தமிழக வீரர் நடராஜன் பந்துவீச்சு குறித்தும் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் மட்டுமே அடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி வெற்றிக்கு ஜடேஜா, சாஹல், நடராஜன் ஆகியோரின் பங்கு முக்கியத்துவமாக அமைந்தது. இதில் சாஹல் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அசத்தினார். அப்போது ஸ்டார்க் வீசிய ஓவரில் ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பந்து பலமாக விழுந்தது. அதனால் அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது ஜடேஜாவுக்கு பதிலாக சாஹல் மாற்று வீரராக களமிறங்கினார்.
இதுகுறித்து போட்டி முடிந்தபின் கூறிய கேப்டன் விராட் கோலி, ‘ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் சற்று மயக்கமாக உணர்ந்தார். கன்கசன் மாற்று வீரர் என்பது விசித்திரமான விஷயம். இன்று அது எங்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் அடுத்த முறை இதுபோல் சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்காது. சாஹல் களமிறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான தொடக்கத்தை பார்க்கும்போது, தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம். டி20 போட்டி எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். ஆனால் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறது. ஹர்திக் பாண்ட்யா கேட்ச் பிடித்தது போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது’ என விராட் கோலி தெரிவித்தார்.