இந்தியாவோட 2 ‘டேஞ்சர்’ ப்ளேயர்ஸ் இவங்கதான்.. ரொம்ப ‘உஷாரா’ இருக்கணும்.. பாகிஸ்தான் கோச் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு இரு அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. அதேபோல் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் (Matthew Hayden), இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் (KL Rahul) மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன். அவரை சீக்கிரமே அவுட் செய்தால் தான் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். கே.எல்.ராகுலின் ஆட்டத்தை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருகிறேன். டி20 கிரிக்கெட்டில் அவர் அதிரடியாக விளையாடக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் (Rishabh Pant) வேகமாக ரன்களை குவித்து விடுவார். அவரது வழக்கமான ஆட்டமே அதிரடியாக விளையாடுவதுதான். அதனால் இவர்கள் இருவரையும் பாகிஸ்தான் அணி சற்று கவனித்துதான் விளையாட வேண்டும். இது இல்லாமல் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனி (Dhoni) எவ்வளவு பெரிய வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது ஆளுமை திறன் இந்திய அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த போட்டியை பாகிஸ்தான் அணி சற்று ஜாக்கிரதையாகதான் விளையாட வேண்டும்’ என மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.